திமுக தலைவரும்,முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நேற்று மாலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
முத்தமிழ் அறிஞர் கிழக்கில் அஸ்தமித்ததால், ஒட்டுமொத்த தமிழகமே துக்கத்தில் மூழ்கியுள்ளது. எனினும் அண்ணாவிடம் அவர் பெற்ற இரவல் இதயத்தை அவர் திருப்பி அளித்து விட்டார் என தொண்டர்கள் ஆசுவாசம் அடைந்துள்ளனர்.அதுகுறித்த ஒரு சிறிய விளக்கத்தினை இங்கே பார்ப்போம்.
1969-ம் ஆண்டு தொண்டை புற்றுநோய் காரணமாக அப்போதைய தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரை பிப்ரவரி மாதம் 3-ம் தேதி மறைந்தார். தமிழகத்தையே மிகப்பெரும் துக்கத்தில் ஆழ்த்திய இந்த நிகழ்வு குறித்து, அவரின் அன்புத்தம்பி கருணாநிதி கவிதை ஒன்றை எழுதி அஞ்சலி செலுத்தினார்.
அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த கலைஞர் எழுதிய கவிதை இதுதான்:-
‘‘பத்துச் சிலை வைத்ததினால் - அண்ணன் தமிழின்பால் வைத்துள்ள
பற்றுதலை உலகறிய அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்தபோது..
ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்.
ஆணையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்
அய்யகோ; இன்னும்
ஓராண்டே வாழப்போகின்றேன் என்று அவர்
ஒர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!
எம் அண்ணா... இதயமன்னா...
படைக் கஞ்சாத் தம்பியுண்டென்று
பகர்ந்தாயே;
எமை விடுத்துப் பெரும் பயணத்தை ஏன் தொடர்ந்தாய்?
உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?
நிழல் நீதான் என்றிருந்தோம்; நீ கடல்
நிலத்துக்குள் நிழல் தேடப் போய்விட்டாய்: நியாயந்தானா?
நான்தானடா நன்முத்து எனச் சொல்லி
கடற்கரையில் உறங்குதியோ?...
நாத இசை கொட்டுகின்ற
நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த
விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன்.. இன்று
மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை!
கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்குத் தெரியும் - அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?’’-
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Two killed during stampede outside Rajaji Hall
- 'ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்'.. போட்டியாளர்கள் உருக்கம்!
- Four prominent leaders come to Chennai to pay homage to Kalaignar
- Did Kalaignar deny space for Rajaji and Kamarajar at Marina?
- ராஜாஜி அரங்கில் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால்,மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் !
- Vehicle being readied for Kalaignar's final journey
- Traffic Ramaswamy's PIL to stop Kalaignar's final journey rejected
- Stalin requests DMK cadres at Rajaji Hall
- 'மெரினாவில் இடம் ஒதுக்க' முதல்வரிடம் கோரிக்கை வைத்தும் செவிசாய்க்கவில்லை: ஸ்டாலின்
- ராணுவ வாகனத்தில் புறப்பட்ட கலைஞர்.. இந்த வழியில் செல்லும் இறுதி ஊர்வலம்!