2000 கிலோ அரிசி..200 ஆடுகள்..‘பிரியாணி’யையே ‘பிரசாதமாக’ வழங்கவுள்ள கோவில்.. எப்போ? எங்கே?

Home > தமிழ் news
By |

மதுரை அருகே உள்ள ஒரு கோவிலில் பக்தர்களுக்கு மட்டன் பிரியாணியை பிரசாதமாக வழங்கும் விநோத திருவிழா நடைபெற இருக்கிறது. கடந்த 83 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக கூறப்படும் இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு பிரியாணியை பிரசாதமாக வழங்கப்படும் செய்தி பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் வடக்கம்பட்டி என்கிற கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெற்றுவருகிறது. இந்த வருடம் வரும் ஜனவரி மாதம் 25-ஆம் தேதி நடக்க இருப்பதாக விழா கமிட்டி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருவிழாவின் சிறப்பே பக்தர்களுக்கு மட்டன் பிரியாணியை பிரசாதமாக வழங்குவதுதான் என்றால் நம்பாதவர்களே அதிகம்.

ஆம், வருடாவருடம் 3 நாட்கள் தொடர்ந்து நடக்கும் இத்திருவிழாவில் ஆயிரம் கிலோ மதிக்கத்தக்க அரிசி , ஆட்டிறைச்சி என இரவு பகலாக பக்தர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் மட்டுமல்லாது சாலையில் செல்லும் அனைவருக்கும் இவர்கள் பிரியாணியை வழங்குகின்றனர்.

இந்த திருவிழா குறித்து நிர்வாக கமிட்டி உறுப்பினர் என்.முனீஸ்வரன் கூறும்பொழுது, ‘திருவிழா நடைபெறும் முதல் நாள் அதிகாலையிலேயே சுமார் 50க்கும் மேற்பட்ட பாத்திரங்களில் பிரியாணி சமைத்து 4 மணியளவில் முனியாண்டி சாமிக்கு படையல் வைக்கப்பட்டு, 5 மணியிலிருந்து பக்தர்களுக்கு பிரியாணி வழங்கப்படும்’ என்று கூறினார்.

மேலும் பேசியவர், கடந்த வருடம் 200 ஆடுகள், 250 சேவல்கள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு சுமார் 1800 கிலோ அரிசியில் பிரியாணி சமைக்கப்பட்டதாகவும், இந்த வருடம் 2 ஆயிரம் கிலோ அரிசியில் பிரியாணி சமைக்கப்படவிருப்பதாகவும் கூறியுள்ளார். 

தற்போது முனியாண்டி விலாஸ் என்கிற பெயரில் நிறைய  ஹோட்டல்களைக் காணமுடிகிறது. ஆனால் 70-களின் தொடக்கத்தில் முதன்முதலாக இந்த கிராமத்தைச் சேர்ந்த எஸ்விஎஸ் சுப்பா நாயுடு என்பவரால்தான் முனியாண்டி விலாஸ் என்கிற பழமை மிகுந்த அந்த ஹோட்டல் தொடங்கப்பட்டதாகவும் முனீஸ்வரன் தெரிவித்தார். 

MADURAI, THIRUMANGALAM, BIRYANI, TEMPLE, MUNIYANDI VILAS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS