‘ஸ்லம்டாக் மில்லினர்: 10வது ஆண்டு விழா’.. மகளுடன் உரையாடிய ஏ.ஆர்.ரஹ்மான்!

Home > தமிழ் news
By |

கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக இந்தியாவுக்கு பெருமை தேடிதந்த உலகப்படம் ஸ்லம்டாக் மில்லினர்.

2009-ல் வெளியான இப்படத்தின் 10-வது ஆண்டு விழா மும்பையின் தாராவி பகுதியில் மிக அண்மையில் நடந்தது. அதில் ஒரு நிகழ்வாக ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் தனது மூத்த மகள் கதிஜா ரஹ்மானுடன் உரையாடுமாறு அமைக்கப்பட்டிருந்த ஒரு சிறப்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பேசிய கதிஜா, ‘அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன். காரணம் அவரின் புகழோ, அவருக்கு அருமையாக கைவரும் இசையோ அல்ல. 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கிக்கொண்டு இன்று வரை அணு அளவும் மாறாத குணத்துடன், எங்களையும் உயர்ந்த குணங்களுடன் வளர்த்துள்ளதுதான்’, என்று கூறியவர் ரஹ்மானைப் பார்த்து, ‘ஆமாம் அப்பா, நீங்க மாறவே இல்ல. அப்ப எப்படியோ அப்படியேதான் இப்பவும் இருக்கீங்க. ஒரே ஒரு குறைதான் அது நீங்க எங்களுடன் இல்லை என்பதுதான்’ என்று ஆதங்கப்படவும் செய்தார்.

மேலும் பேசியவர், ‘திரைத்துறையில் மட்டுமல்லாது, தனிமனிதராக அப்பா செய்யும் பல உதவிகள் யாராவது சொன்னால்தான் எங்களுக்கே தெரியும்’ என்று கூறியவர், ‘வாழ்க்கையில் வேலை உள்ளிட்ட அடுத்த கட்டத்துக்கு போகும், எங்களுக்கு நீங்கள் சொல்லும் அட்வைஸ் என்னப்பா?’என்று ரஹ்மானிடம் கேட்கிறார். அதற்கு ரஹ்மானோ, ‘என் அம்மா எனக்கு சொன்னதை நான் உங்களுக்குச் சொல்வது என் கடமை. ஆனால் நீங்கள்  மனம் சொல்வதை கேளுங்கள்’ என்று பதில் கூறி அசத்தியுள்ளார்.

2 ஆஸ்கர்களை வாங்கிய பின், அப்போது இருந்த ரஹ்மானின் மனநிலை பற்றி கேட்டபோது,  ‘உண்மைய சொல்லனும்னா, ஆஸ்கர் வாங்கும் நிகழ்வுல ஒல்லியாகத் தெரியனும்னு பட்டினி கிடந்தேன்’ என்று விளையாட்டாகக் கூறியிருக்கிறார். மேலும் அந்த நிகழ்ச்சியின்போது தனக்கு தாகமாக இருந்ததாகவும் அப்போது அவரின் அன்புக்குரியவரான அனில் கபூர் ரஹ்மானுக்காக ஸ்பிரைட் வாங்கச் சென்றதையும், ஆனால் அதற்குள் ரஹ்மான் மேடையேறி விருது பெற்றதால், அனில் கோபமாகி ரஹ்மானை மன்னிக்க மாட்டேன் என்று அன்பாக கோவித்துக்கொண்டதையும் ரஹ்மான் இந்நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ரஹ்மானின் மகள் கஜிதா பர்தா அணிந்திருந்ததால், ரஹ்மான் பிற்போக்குத் தனமானவர் என்பன போன்ற விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதில் அளிக்கும் விதமாக, ‘என் அப்பா என்னை கட்டாயப்படுத்தவில்லை, நான் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் முழு சுதந்திரமும் எனக்கிருக்கிறது. அந்த விருப்பத்தின்படியே நான் இருக்கிறேன். உங்கள் எடைபோடும் வேலையை தயவு செய்து நிறுத்துங்கள்’ என்று தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

ARRAHMAN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS