போராட்டம் வாபஸா.. தோல்வியா? ஆசிரியர் தரப்பில் கூறுவது என்ன?

Home > தமிழ் news
By |

பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் கடந்த 22-ஆம் தேதியில்  இருந்து நடந்த ஆசிரியர் பணிநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்புகள் அறிவித்துள்ளன.

தொடர்ந்து ஆசிரியர் போராட்டம் நடைபெற்றதால், பலர் கைது செய்யப்பட்டதோடு, பள்ளிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்களை காலியிடங்களாக அறிவித்து,  பள்ளிக்கல்வித்துறை ரூ.7,500 சம்பளத்துக்கு தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியப் பணிகளை நியமிக்கச் சொல்லி ஆணையிட்டது. அதற்கான விண்ணப்பம் வழங்கும் பணியையும் தொடங்கியது. ஆனாலும் தொடர்ந்து ஆசிரியர் போராட்டம் வலுத்ததோடு, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் இணைந்ததாலும், அடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஊழியர்கள், நீதித்துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் இணைந்ததாலும், தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்புகள் ஆதரவு அளித்ததாலும் போராட்டம் மேலும் வலுப்பெற்றது.

இதனிடையே நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒண்ணாங்கிளாஸ் வாத்தியாருக்கு பி.இ.பட்டதாரியை விட சம்பளம் அதிகம், வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக அரசின் கருவூலம் நிரம்பிவிடாது என்பன போன்ற கருத்துக்களை பதிவிட்டது சர்ச்சைகளை எழுப்பியது. அதே சமயம், ஆசிரியர்கள் உடனடியாக பள்ளிக்குத் திரும்பினால் அவர்கள் விரும்பும் இடத்துக்கு பணியிட மாற்றங்களை செய்துகொள்ளலாம் என்கிற கூடுதல் சலுகை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. எனினும் ஜனவரி 29-ஆம் தேதி இரவு 7 மணிக்குள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் போராட்டக்காரர்களின் பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்படும் என்று தீர்க்கமாகச் சொல்லியது பள்ளிக்கல்வித்துறை. ஆனாலும் 99 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டதால் தற்காலிக ஆசிரியர் நியமனம் தேவையில்லை என்றும் அறிவித்தது.

ஆசிரியர்களின் இந்தப் போராட்டம், ஊதிய உயர்வுக்காகத்தான் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில்,  சில குளறுபடி திட்டங்கள் தான் இந்தப் போராட்டத்தின் முக்கிய காரணம் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது. அதில் குறிப்பாக, பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம்(CPS)  மூலம், ஒவ்வொரு மாதத்திற்கும் 10% சம்பள பணத்தை பிடித்துள்ள மாநில கணக்காயம், அந்தப் பணத்தை பல்வேறு முதலீடுகளில் போட்டு, பெறப்படும் லாபத்தில் இருந்து 25% பணம் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் என்றும் மீதமுள்ள 75 % பணம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால் 2003-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் வாயிலாக யாரும் சரியான பயனை அடையவில்லை என்று ஆசிரியர்கள் குறைகூறியுள்ளனர்.

மேலும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து 10 வருடங்களுக்கு ஒருமுறை பே-கமிஷன் எனப்படும் திட்டத்தின் மூலம் ஆசிரியர்களின் புதிய சம்பளம் மாற்றப்படும் என்று கூறியவர்கள், இந்த கலந்தாய்வானது 2016-ல் நடைபெறாமல் 2018-ல் நடந்ததாகவும்,  ஆனால் 2016–ல் கலந்தாய்வு நடந்து புதிய சம்பளம் மாற்றப்பட்டதாக கணக்கு காண்பிக்கப் பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இந்த புதிய சம்பள உயர்வு 2016-ஆம் ஆண்டு முதலே ஆசிரியர்களைத் தவிர மற்ற பெரிய அரசு ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டதுதான் இந்தப் போராட்டம் தீவிரமானதற்கு முழுமுதற் காரணமாகக் கூறப்படுகிறது.

அதோடு, பள்ளி கல்வித்துறையின் முதன்மை அலுவலர் பிரதீப் யாதவ் மேற்கு வங்களத்தைச் சேர்ந்தவர் என்றும், அந்த மாநிலத்தை ஒப்பிடும் போது தமிழகத்தில் ஆசிரியர்களின் சம்பளப் பணம் அதிகமாக இருப்பதால் அவருக்கும் இந்த போராட்டத்தை புரிய வைப்பதில் தங்களுக்கு சிரமம் உண்டானதாகவும், மேற்கொண்டு போராட்டத்தை நடத்த, சரியான தலைமை இல்லாமல் போராட்டம் நீர்த்துப் போனதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

TNTEACHERSSTRIKE, JACTTOGEO, TNGOVT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS