ஃபகத் ஃபாசில், ரோஷன் மேத்யூ, தர்ஷனா உள்ளிட்டோர் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் படம் சி யூ சூன் (C U Soon). ஃபகத் ஃபாசில், நஸ்ரியா இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தை மகேஷ் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார்.
துபாயில் பணி செய்யும் ஜிம்மி குரியன் என்பவருக்கு ஒரு டேட்டிங் ஆப் மூலம் அனுமோல் என்பவருடன் தொடர்பு ஏற்படுகிறது. இருவரும் ஒருவரையொருவர் நேசிக்கத் தொடங்குகின்றனர். இதனையறிந்த அனுமோலின் அப்பா அவரை உடல் ரீதியாக துன்புறுத்த ஜிம்மியின் வீட்டிற்கு அனு வந்து விடுகிறாள். ஒரு கட்டத்தில் அனு திடீரென காணமால் போகிறாள். போலீஸ் ஜிம்மியை விசாரணைக்காக அழைத்து செல்கிறது.
ஜிம்மியின் உறவினரும் சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பெர்ட்டுமான கெவின் தாமஸ், அனுமோல் குறித்து ஆராய திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. உண்மையில் அனுமோல் செபாஸ்டியன் என்பவர் யார் ?, ஜிம்மி இந்த பிரச்சனையில் இருந்து வெளியேற கெவின் தாமஸ் எவ்வாறு உதவினார் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படமே சி யூ சூன்.
ஸ்மார்ட் ஃபோன்ஸ், இண்டர்நெட், சோஷியல் மீடியா போன்றவை தொழில்நுட்ப வளர்ச்சியினால் நமக்கு கிடைத்த பலன்கள். அவை மட்டும் இல்லையென்றால் இந்த கடினமான இந்த கொரோனா காலக்கட்டத்தை அவ்வளவு எளிதாக கடக்க முடியாது. இந்த தொழில்நுட்பங்களே பெரும்பாலானோருக்கு வீட்டிலிருந்தே பணி செய்யும் சூழலை உருவாக்கி அவர்களது வாழ்வாதார தேவைகளுக்கு உதவிவருகிறது
இப்படி நன்மைகள் ஒரு புறம் இருந்தாலும், அதில் உள்ள ஆபத்துகளையும் மறுக்க முடியாது. எல்லா தேவைகளையும் இணையம் வழி நிவர்த்தி செய்து கொள்ளும் இந்த காலக்கட்டத்தில் ஒருவருடைய தகவல்களை எளிதாக பெற்று தவறாக பயன்படுத்த முடியும் என்ற ஆபத்தை மறைமுகமாக சொல்லியிருக்கிறது இந்த படம்.
ஃபேஸ்புக், வாட்சப், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நன்றி சொல்லியே படம் துவங்குகிறது. படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே அதன் காரணம் புரிந்து விடுகிறது. முழுவதுமாக வீடியோ கால், சிசிடிவி காட்சி, வாட்சப் உரையாடல்கள் ஆகியவற்றை கதை சொல்லும் கருவியாக பயன்படுத்தி முற்றிலும் புதுமையான காட்சி அனுபவத்தை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான மகேஷ் நாராயணன்.
ஜிம்மி குரியனாக ரோஷன் மேத்யூ, அனுமோலாக தர்ஷனாக இருவரும் மிகவும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக தர்ஷனா தனது பின்னணி குறித்து யாரும் கணிக்க முடியாத அளவுக்கு அந்த கேரக்டரை மிக இயல்பாக செய்திருக்கிறார். மேலும் எமோஷனல் காட்சிகளில் கண் கலங்க வைத்திருக்கிறார்.
கெவின் தாமஸாக ஃபகத் ஃபாசில். ஒட்டு மொத்தம் படமும் அவரது பார்வை வழியாகவே நகர்கிறது. அவரை பலவிதமான கதாப்பாத்திரங்களில் பார்த்திருப்பதால் பார்வையாளர்களுக்கு அவர் எப்படிப்பட்டவர் என்ற சந்தேகம் படம் நெடுக தோன்றும் அளவுக்கு தத்ரூபமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
படம் பார்க்கும் போது பார்வையாளர்களுக்கு ஒருவித சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும் அளவுக்கு சுவாரஸியமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். இறுதிக்காட்சியில் கெவின், ஜிம்மியிடம், 'இப்பொழுதும் நீ அனுவை லவ் பண்றியா?' என்று கேட்பார். அதற்கு ஜிம்மி பதில் சொல்ல முடியாமல் தயங்குவார். இப்படி தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்களால் மிக விரைவாக ஒரு ரிலேஷன்சிப்பில் ஈடுபட முடிகிறது என்பதையும் அதில் உள்ள ஆபத்துக்களையும் திரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறது இந்த சி யூ சூன்.