ராகவா லாரன்ஸ் நடிப்பு- இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி செம ஹிட்டடித்த படம் காஞ்சனா. 9 ஆண்டுகளுக்கு பின் இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு லக்ஷ்மி என்ற பெயரில் இன்று வெளியாகி இருக்கிறது.
அக்ஷய் குமார், கியாரா அத்வானி, ஷரத் கெல்கர், ராஜேஷ் சர்மா, ஆயிஷா ராஷா மிஸ்ரா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் லக்ஷ்மி படத்தை டிஸ்னி + ஹாட் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி பிரத்தியேகமாக தன்னுடைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறது.
வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த கியாரா அத்வானி தன்னுடைய கணவர் அக்ஷய் குமாருடன் 3 ஆண்டுகளுக்கு பின் பிறந்த வீட்டுக்கு செல்கிறார். மாமனார் வீட்டுக்கு சென்று அவர்கள் குடும்பத்தினரிடம் நல்ல பெயர் வாங்கும் முனைப்புடன் அக்ஷய் செல்கிறார். அக்கம், பக்கம் இருக்கும் சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட அருகில் இருக்கும் காலி இடத்திற்கு செல்கிறார்.
அங்கு ஸ்டம்ப்பை அடிக்க முயற்சி செய்யும்போது வானம் இருண்டு மழை வருவது போல சூழ்நிலை மாறுகிறது. இதைப்பார்க்கும் சிறுவர்கள் வீட்டிற்கு ஓடிவிட அந்த ஸ்டம்பை கழுவாமலேயே அக்ஷய் வீட்டுக்கு எடுத்து வருகிறார். இதையடுத்து வீட்டுக்குள் லக்ஷ்மி பேயாக வந்து விடுகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகளில் அக்ஷய் லக்ஷ்மியாக உருமாறுகிறார். இதைப்பார்க்கும் அவரது வீட்டினர் அவரை மசூதிக்கு அழைத்து சென்று அவரின் உடலில் இருக்கும் பேயை விரட்டும் முயற்சியில் இறங்குகின்றனர்.
அக்ஷய் உடலில் இருந்து லக்ஷ்மியை விரட்ட எடுக்கும் முயற்சிகளில் லக்ஷ்மி யார்? அவர் ஏன் கொலை செய்யப்பட்டார்? என்ற விவரங்கள் அக்ஷய்க்கு தெரிய வருகின்றது.
லக்ஷ்மி தன்னுடைய பழியை தீர்க்க அக்ஷய் உதவி செய்தாரா? லக்ஷ்மியின் கொலைக்கு காரணமானவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் கிளைமாக்ஸ். தமிழில் காஞ்சனா படம் மாபெரும் வெற்றி பெற்றதுக்கு படத்தில் இருந்த நகைச்சுவை காட்சிகளும் ஒரு மிகப்பெரிய காரணம்.
அதேபோல சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பயந்து அம்மாவை துணைக்கு அழைக்கும் ராகவா லாரன்ஸ், சிறிது சிறிதாக காஞ்சனாவாக உருமாறும் காட்சிகள் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால் லக்ஷ்மியில் பேய்களுக்கு பயப்படாத நபராக அக்ஷய் நடித்து இருப்பதால் அவர் லட்சுமியாக உருமாறும் காட்சிகள் பெரிதாக கவரவில்லை.
பாடல்களும் கதையோட்டத்தில் இல்லாமல் தனி டிராக்காக செல்கின்றன. கியாராவுக்கு நடிக்க பெரிதாக வாய்ப்புகள் இல்லை என்றாலும் கிடைத்த இடத்தில் ஸ்கோர் செய்து செல்கிறார்.