இந்த உலகம் எப்படி அழியும்..? அந்த நொடி எப்படி இருக்கும்..? அதன் பிறகு என்னவாகும்? அல்லது இந்த உலகத்தை அழிக்க எதிர்காலத்திலிருந்து ஒரு சில விஷயங்கள் பேராபத்தை விளைவித்தால் அதிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பது போன்ற கேள்விகள் பலருக்கு எழலாம். அந்த கேள்வியை பெரிதாக்கி, அந்தச் சிறு புள்ளியை கோலமாக்கி சில அறிவியல் புனைவுகளை உடன் சேர்ந்து திரைக்கதை எழுதினால், அதை உலகப் புகழ்ப் பெற்ற இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் எடுத்தால் அதன் பெயர்தான் டெனட்.
ஒரு மர்மமான புதிய தொழில்நுட்பம் மனித இருப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தி புரொடாகனிஸ்ட் என்றழைக்கப்படும் (ஜான் டேவிட் வாஷிங்டன்) தன்னுடைய அசாத்திய துணிச்சலாலும், அறிவாற்றலாலும் உலகப் போரை காட்டிலும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அந்த தொழில்நுட்பத்தை கண்டு பிடித்து அதன் பிடியிலிருந்து இவ்வுலகை மீட்டெடுப்பதே இப்படத்தின் ஒரு வரிக் கதை.
ஆனால் அதைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் ஆழமான விஷயங்களாக இயற்பியல் கலந்த அதிபுனைவில் காலம், சூழல், மனித மனம் செயல்படும் விதம் உள்ளிட்ட சிலவற்றை இணைத்து சற்றே குழப்பமான திரைக்கதையுடன் அளித்திருக்கிறார் நோலன்.
எந்தவொரு அழிவிற்கும் காரணமாக இருப்பது மனிதர்களின் பேராசைதான். எதிர்கால மனிதர்களிடம் நிகழ்காலத்தை அழிக்க தன்னையே அழித்துக் கொள்ள முன்வரும் ஆந்த்ரே சடார் (கென்னத் பிரனாக்) என்பவனை கண்டுபிடித்து அவனது மரணத்தை தடுக்க புரொடாகனிஸ்ட் களத்தில் இறங்குகிறான். இதில் ஆந்த்ரேயின் மனைவி கேட் (டயான எலிஸபெத் டெபிகி), நீல் (ராபர்ட் பாடின்ஸன்) மற்றும் மும்பையில் உள்ள துப்பாக்கி டீலர் சஞ்சய் என்பவனின் மனைவியான பிரியா (டிம்பிள் கபாடியா) ஆகியோரும் இணைந்து செயல்படுகிறார்கள்.
அவர்கள் இவனை இயக்குகிறார்களா அல்லது அவன் தான் இவர்களை மையமாக வைத்து இயக்குகிறானா என்பதை இறுதிக் காட்சியில் சில முடிச்சுகளை அவிழும் போது வெளிப்படும். நிகழ் காலத்திலும், எதிர்காலத்திலும் மாறி மாறி பயணித்து இறுதியில் மனித குலத்துக்கு எதிராக இயங்கப் போகும் அந்த தொழில்நுட்பத்தின் மூலக் கூறை கண்டடைகிறானா என்பதை மின்னல் வேகத் திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
ஐமாக்ஸ் திரையில் பார்க்க எனவே எடுக்கப்பட்ட சில காட்சிகள் வியக்க வைக்கிறது. அதிலும் கப்பலில் ஆந்த்ரேயின் கப்பல், மற்றும் புரொடாகனிஸ்ட் கேட்டை காப்பாற்றும் அதிரடி காட்சிகள் படத்துக்கு பலம் சேர்ப்பவை. இப்படத்தின் சில தெளிவற்ற தருணங்களில் கதையில் என்ன நடக்கிறது எதை நோக்கி நகர்கிறது என்று யோசிக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பான கேமரா நகர்வுகளும் சுவாரஸ்யமானவை. இந்த மெனக்கிடலை கதையிலும் செலுத்தியிருந்தால் டெனெட் எல்லையற்ற சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
நோலனின் முந்தைய படங்களான இன்ஸெப்ஷன் மற்றும் இண்டர்ஸ்டெல்லார் படங்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு. அதை மீண்டும் மீண்டும் பார்த்து சிலாகிக் கூடிய விஷயங்கள் அப்படங்களின் உள்ளன என்றால் மிகையில்லை. ஆனால் டெனட்டைப் பொருத்தவரையில் இந்தப் படத்தை புரிந்து கொள்ளவே இன்னொரு தடவை பார்ப்பவர்கள் உள்ளனர். இன்வர்ட் என்ட்ராபி என்பதில் தொடங்கி, முன்னும் பின்னுமாக கால நகர்தலில் இந்தப் பக்கம் இருப்பவரை அங்கு உள்ளவர்கள் ஏன் அழிக்க நினைக்கிறார்கள் என்பதற்கான சரியான காரணங்கள் சொல்லப்படுவதில்லை.
இதில் அதிகம் புரிந்து கொள்வதற்கு எதுவுமில்லை உணர வேண்டும் என்று ஒரு டயலாக்கில் அவர்களே கூறிவிடுவதால் உணர்வதற்கான பிரம்மாண்டமான காட்சிகள் நிறையவே உள்ளன. அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், கடல் சார்ந்த காட்சிகள், போர் விமானங்களின் அணிவகுப்பு, விமான தளத்தில் ஏற்படுத்தப்பட்ட விபத்து என ஒளிப்பதிவாளர் ஹொய்ட் வான் ஹொய்டேமாவின் அசத்தலான கேமரா கோணங்கள் பேரானுபவத்தை அள்ளி வழங்குகிறது.
உறங்கும் போதும் சரி, விழித்திருக்கும் போதும் சரி கனவு காண்பது என்பது மனிதர்களுக்கு எப்போதும் பிடிக்கும். இதுபோன்ற ஒழுங்கமைக்கப்பட்ட கனவுகளை திரையில் பார்க்க வைத்திருக்கும் நோலனின் ரசிகர்கள் அவரிடம் எதிர்ப்பார்ப்பது கதையை மட்டுமல்ல, திரைப்படத்தின் மற்றும் மனித ஆற்றலின் உச்சபட்ச சாத்தியங்களை என்பதை டெனட் உறுதிப்படுத்தி உள்ளது.