'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' படத்திலேயே சக்தி வாய்ந்த வில்லனான தானோஸ், தனது இன்ஃபினிட்டி ஸ்டோன்ஸ்-ஐ பயன்படுத்தி 50 சதவிகிதம் உலகத்தை அழித்திருப்பார். அதற்கு நமது சூப்பர் ஹீரோஸின் எதிர்வினைகளே 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்தின் கதை.
இந்த படத்தின் முதல் பிளஸ் படத்தின் கதை சொல்லப்பட்ட விதம். வழக்கமாக அவெஞ்சர்ஸ் படங்களில் ஒரு பிரச்னை வரும். அதனை சூப்பர் ஹீரோஸ் எப்படி சரி செய்கிறார்கள் என்பது போன்ற டெம்பிளேட்டிலேயே கதை சொல்லப்பட்டிருக்கும்.
ஆனால் இந்த படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்கும் அவர்களுக்கான தனிப்பட்ட முறையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகளும், ஆறுதலும் சொல்லப்பட்டிருப்பது நன்றாக இருந்தது. அது பின்பகுதியில் வரும் காட்சிகளுக்கு கூடுதல் பலம் அளித்தது.
படம் முழுக்க ஆங்காங்கே சர்ப்ரைஸ்கள் ரசிகர்களுக்கு மெய் சிலிர்க்கச் செய்யும் வகையில் இருந்தது. வழக்கம் போல இந்த படத்திலும் காமெடிக்கு பஞ்சமில்லை. குறிப்பாக ஹல்க் மற்றும் தோர் வரும் காட்சிகளில் தியேட்டரே சிரிப்பலைகளால் அதிர்கிறது.
சூப்பர் ஹீரோஸ் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென பிரத்யேக காட்சிகள் வைத்து அவர்களின் ரசிகர்களை மகிழ்வித்தது, எழுத்தாளர்களின் புத்திசாலித்தனத்தைக் காட்டியது.
குறிப்பாக இடைவேளைக்கு பிறகான நம் கண்களை இமைக்கக் கூட மறக்கும் அளவுக்கு காட்சிகள் நிறைய இருக்கிறது. இந்த படம் தொடக்கம் முதல் இறுதிவரை சிரிக்க வைத்து, அழ வைத்து, ஆச்சர்யம் அளித்து, ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்துக் கொண்டே இருந்தது. இறுதிக்காட்சிகளில் அனைவரும் சீட் நுனிக்கே சென்று படம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
படத்தின் குறை என்று பார்த்தால் முதல் பகுதியில் கதை சொல்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் மையப் பிரச்சனையை நோக்கி செல்வதற்கு உண்டான தாமதம் சிலருக்கு பிரச்சனையாக தோன்றலாம்.
படம் முடிந்த பிறகும் திரையரங்கில் இருந்து ரசிகர்கள், இறுதிவரை அமர்ந்து அடுத்து ஏதாவது அப்டேட் இருக்குமா என்று காத்திருந்தது, அவெஞ்சர்ஸ் திரைப்படங்கள் ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்திற்கு சான்று. ரசிகர்களின் நீண்டநாள் காத்திருப்புக்கு இந்த படம் நிச்சயம் ஏமாற்றம் அளிக்காது.