நானி, சுதீர் பாபு, நிவேதா தாமஸ், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் படம் 'வி'. தில் ராஜு, ஷிரிஸ், ஹர்ஷித் ரெட்டி இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தை மோகனகிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார்.
தொடர் கொலைகளை செய்யும் நானி, ஒவ்வொரு கொலையின் போது டிசிபி சுதீர் பாபுவிற்கு அடுத்த கொலைக்கான தகவலை விட்டு செல்கிறார். நானி ஏன் தொடர் கொலைகள் செய்கிறார், சுதீர் பாபுவிற்கும் அவருக்கும் என்ன தொடர்பு உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை சொல்லும் படமே 'வி'.
இதுவரை நானி செய்த கதாப்பாத்திரங்களில் பெரும்பாலும் ஹியூமர் கலந்து இருக்கும். ஆனால் இது அவருக்கு முற்றிலும் சீரியஸான வேடம். ஒரு கொடூரமான சைக்கோவாக முதல் காட்சியில் இருந்தே தன் வேடத்தை நம்பும்படி செய்துவிடுகிறார். டிசிபியாக சுதீர் பாபு கலவரத்தை கட்டுப்படுத்தும் முதல் காட்சியிலேயே தனது தோற்றத்தாலேயே அந்த வேடத்துக்கு சரியான ஆள் என்பதை நிரூபிக்கிறார்.
ஒரு எழுத்தாளராக தோன்றி, சுதீர் பாபுவிற்கு நானியின் க்ளூவை கண்டறிய உதவி முக்கிய காட்சிகளுக்கு பயன்பட்டிருக்கிறார் நிவேதா தாமஸ். அழுத்தமான நடிப்பை வழங்கி எமோஷனல் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளார் அதிதி. மேலும் வெண்ணிலா கிஷோர், ரோகினி, தலைவாசல் விஜய், மதுசூதனன் போன்றோர் தங்கள் பணிகளை நிறைவாக செய்துள்ளனர்.
தமனின் பின்னணி இசை காட்சிகளுக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. குறிப்பாக நானி தோன்று காட்சிகளில் வழங்கியிருக்கும் பிஜிஎம் பதைபதைக்க வைக்கிறது. நானி கொலை செய்யும் காட்சிகளை வித்தியாசமான கோணங்களால் பதிவு செய்து தன் பங்குக்கு மிரட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிஜி விண்டா.
இருப்பினும் ஒவ்வொரு கொலைக்கும் நானி, சுதீருக்கு கால் செய்து சகஜமாக பேசுவதும் க்ளூ கொடுப்பதும் ஹீரோயிஸத்திற்கு பயன்பட்டிருக்கிறதே தவிர, நம்பும்படி இல்லை. சிலருக்கு ஒரு சில காட்சிகள் ஏற்கனவே பார்த்த படங்களின் பாதிப்பை தரலாம்.
மேலும் ஒரு கட்டத்துக்கு மேல், நானியை கண்டுபிடிப்பதை விட அவர் ஏன் கொலைகள் செய்கிறார் என்பதில் கவனம் செலுத்துகிறார் சுதீர். மேலும் படத்தில் இருக்கும் ஓவர் ஹீரோயிஸமும் படத்தின் நம்பகத்தன்மையை குறைக்கிறது.
இருப்பினும் நானி ஏன் தொடர் கொலைகள் செய்கிறார் என்ற காரணத்தை கணிக்க முடியாத வகையில் கையாண்டிருப்பது கடைசி காட்சி வரை படத்தின் விறுவிறுப்புக்கு உதவியிருக்கிறது.