தென்காசியில் அரசு பஸ் டிரைவரான பசுபதி கபடி விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இளைஞர்களை தயார் செய்து தன் சொந்த செலவில் சுற்று வட்டாரங்களில் நடைபெறும் கபடி போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கிறார். அவரது மகன் விக்ராந்த் ஊரில் பாட்டு கேசட் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவருக்கு ஊரில் பெரிய இடத்து பெண்ணான அர்த்தனா மீது காதல். இருவரின் காதலுக்கு அர்த்தனாவின் அப்பாவான ரவி மரியா பிரிக்க நினைக்கிறார்.
அப்போது தான் விக்ராந்திற்கு தன் அப்பா மிகப் பெரிய கபடி வீரர் என்பதும் தன்னால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அவர் கபடி விளையாடமல் இருப்பதும் தெரிய வருகிறது. கோபத்தில் இருக்கும் ரவி மரியா, விக்ராந்தை ஏதாவது செய்து விடக் கூடும் என அச்சம் கொள்கிறார் பசுபதி. அதனால் விக்ராந்தை சென்னையில் இருக்கும் தனது நண்பரிடம் அனுப்புகிறார்.
ஆனால் விக்ராந்த் தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற கபடி விளையாட்டில் சாதிக்க வேண்டும் என முடிவெடுக்கிறார். அதனால் பழனி சென்று வெண்ணிலா கபடி குழு டீமிற்காக விளையாட முடிவு செய்கிறார். பயிற்சியாளரான கிஷோர் அவரை ஏற்றுக்கொன்று பயிற்சி அளிக்கிறார். அவர் கபடி போட்டிகளில் விளையாடி சாதித்து தன் காதலியை கரம் பிடிக்கிறாரா இல்லையா என்பதே படத்தின் கதை
படத்துக்கு மிகப் பெரிய பலம் பசுபதியின் நடிப்பு. கபடி விளையாட்டில் ஈடுபாடு கொண்டவராக விளையாட்டு வீரர்களுக்கு உதவி, அதற்காக தன் மகனிடம் திட்டு வாங்குவது என வெகுளியாக ஒரு புறமும், தன் மகனுக்கு ஒரு பிரச்சனை என்றதும் வேட்டியை மடித்துக் கட்டி சண்டை செய்வது என கம்பிரமான மறு முகமும் நடிப்பால் அசரடிக்கிறார்.
இரண்டாவது பலம் விக்ராந்த். ஊரில் ஜாலியாக காதல், கலாட்டா என துறு துறு கிராமத்து இளைஞனை கண் முன் நிறுத்துகிறார் விக்ராந்த். தன் அப்பாவின் ஆசையை உணர்ந்து கொண்டு அதை நிறைவேற்றத் துடிக்கும் இளைஞனாகவும் கவனம் ஈர்க்கிறார். கிஷோருக்கு வெண்ணிலாக் கபடி குழுவில் இருந்த அதே வேடம் தான். ஆனால் அந்த படம் அளவுக்கு அவரது நடிப்பிற்கு இந்த படம் தீனி போடவில்லை.
வெண்ணிலா கபடிக் குழுவில் பார்த்த முகங்களான சூரி, அப்புக்குட்டி போன்றவர்கள் இரண்டாம் பாதிக்கு மேல் வருகிறார்கள். சூரி ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்க முயல்கிறார். இறுதியில் நடக்கும் கபடி போட்டிகள் சுவாரஸிமாக இருக்கின்றன. படத்தில் கிராமத்து லொகேஷன்கள் மற்றும் கபடி போட்டிகளை நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்து கவனம் ஈர்க்கிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி. இசையமைப்பாளர் செல்வகணேஷின் பின்னணி இசையும் படத்துக்கு துணை புரிந்திருக்கிறது.
முதல் பாகத்தின் சுவாரஸியம் என்னவென்றால் யதார்த்தமான வெளியுலகம் அறியாத கிராமத்து இளைஞர்கள் முறைப்படி நடக்கும் கபடி போட்டியை வெல்கிறார்கள் என்பதே. அது இந்த படத்தில் மிஸ்ஸிங். முதல் பாதியில் கதை தொடங்குவதற்கே நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கதைக்கு பயன்படாத காதல் காட்சிகளையும் அதனைத் தொடர்ந்து இரண்டு பாடல்களையும் குறைத்திருக்கலாம்.
மேலும் வெண்ணிலாக் கபடிக் குழு டீம் பற்றி எப்படி விக்ராந்திற்கு தெரியும் என்பதற்கான காட்சிகள் படத்தில் இல்லை. அதே போல இரண்டாம் பாதியில் விக்ராந்த் அணியில் சேர்ந்து பயிற்சி எடுக்கிறார். அவர்கள் பயிற்சி பெறுவது ஒரு பாடல் காட்சியில் மட்டுமே காட்டப்பட்டிருக்கும். அதன் பின்னரும் திருவிழா பாடல், காமெடி காட்சிகள் கதைக்கு துளியும் சம்மந்தமில்லாத காட்சிகள் அதிகம் இருக்கிறது. முதல் பாகத்தை போல நம்பகத்தன்மை காட்சிகளுடன் சொல்லப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இருப்பினும் ஒரு சுவாரஸியமாக அப்பா - மகன் இடையேயான சென்டிமென்ட் காட்சிகள், பரபரப்பான கபடி போட்டிகளை சுவாரஸியமாக சொன்ன விதத்தில் கவனம் ஈர்க்கிறது இந்த வெண்ணிலாக் கபடி குழு 2.