15 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த சண்டக்கோழி படத்தின் 2-வது பாகம் இப்பொழுது வெளியாகி இருக்கிறது. விஷால்-லிங்குசாமி கூட்டணியின் சண்டக்கோழி ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.
இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் புதிதாக இணைந்துள்ளனர். முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த மீரா ஜாஸ்மின் கதாபாத்திரம் குறித்து படத்தில் இயக்குநர் கனெக்ட் செய்திருக்கிறார். மற்றபடி முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் இப்படத்திலும் தங்களது கதாப்பாத்திரத்தை 'கண்டினியூ' செய்துள்ளனர்.
7 வருடங்களுக்குப் பின் வெளிநாட்டில் இருந்து விஷால் சொந்த ஊருக்கு வருகிறார். அதே நேரம் பல வருடங்களாக நின்று போயிருந்த திருவிழாவை எடுத்து ராஜ்கிரண் தலைமையில் நடத்த 7 ஊர்களின் தலைவர்களும் முயற்சி செய்கின்றனர். இதற்கிடையில் சொந்த பகை காரணமாக விஷால், ராஜ்கிரண் இருவருடனும் வரலட்சுமி மோதுகிறார். 7 வருடங்கள் திருவிழா நடைபெறாமல் போனது ஏன்? என்பதுதான் படத்தின் மூலக்கதை.
ஊருக்குள் வரும் விஷாலுக்கு குட்டி, குட்டி குறும்புகளுடன் ஊரைச்சுற்றும் கீர்த்தி சுரேஷை பிடித்துப்போக, இருவரும் காதலிக்கின்றனர். ஒருகட்டத்தில் கொடுத்த வாக்கிற்காக உயிரையும் கொடுப்பதற்கு ராஜ்கிரண் துணிய, காதலைவிட கடமையே பெரிது என ஊர் நலனுக்காக சொந்தக்காதலை தியாகம் செய்கிறார் விஷால். ராஜ்கிரண் - விஷால் - வரலட்சுமி இடையிலான பகை தீர்ந்ததா? விஷால்-கீர்த்தி ஒன்று சேர்ந்தார்களா? ஊருக்குள் திருவிழா நடந்ததா? போன்ற கேள்விகளுக்கான விடையே சண்டக்கோழி 2.
விஷாலுக்கு ஆக்ஷன் ஹீரோ அடையாளம் கொடுத்த படங்களில் முக்கியமானது சண்டக்கோழி. முதல் பாகத்தைப் போல, 2-வது பாகத்திலும் தான் ஆக்ஷன் ஹீரோ என்பதை விஷால் நிரூபித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கான கம்பீரம், தோரணை என தேர்ந்தவொரு நடிப்பினை ராஜ்கிரண் அளித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ்,வரலட்சுமி சரத்குமார் இருவரும் தங்கள் கதாபாத்திரத்திங்களை முடிந்தளவு சிறப்பாக செய்துள்ளனர்.
துறு துறு பெண்ணாக வரும் கீர்த்தி முதல் பாகம் மீரா ஜாஸ்மினை ஞாபகப்படுத்துகிறார். இதுவரை கீர்த்தி ட்ரை செய்யாத பாடி லாங்வேஜும், டயலாக் டெலிவரியும் படத்தில் புதுசாக இருக்கிறது. வில்லியாக வரலட்சுமி கிடைத்த இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இருந்தாலும் தனது இயல்பான வசனம் + உடல்மொழியால் படம் முழுவதும் ஆங்காங்கே சிக்ஸர்களை பறக்க விடுகிறார் ராமதாஸ். இவரின் கவுண்டர்களுக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ்.
சண்டக்கோழி 2-ம் பாகத்தை இயக்கியிருக்கும் லிங்குசாமி திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யங்களை சேர்த்திருக்கலாம். அதேபோல 15 வருடங்களுக்கு முன் வெளியாகி கமர்ஷியல் ஹிட்டடித்த சண்டக்கோழி கதையை, தற்போதுள்ள ஆடியன்ஸ் ரசனைக்கேற்ப சற்றே மாத்தியிருக்கலாம். யுவன் மாஸ் படத்துக்கேற்ற பின்னணி இசையை அளித்திருக்கிறார். பாடல்கள் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. சக்திவேலின் ஒளிப்பதிவு கிராமத்து திருவிழாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.