விஷ்ணுவிஷால், அமலாபால், சூசன் ஜார்ஜ், காளி வெங்கட், ராமதாஸ் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் 'ராட்சசன்'. போலீஸ்-சைக்கோ திரில்லராக வெளியாகியிருக்கும் இப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.
உதவி இயக்குநராக இருக்கும் விஷ்ணு இயக்குநர் ஆக வேண்டும் என பெரும் முயற்சி செய்து வருகிறார். அதற்காக சைக்கோ திரில்லர் கதையொன்றை எழுதி வைத்துக் கொண்டு தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி வருகிறார். ஆனால் அவரது இயக்குநர் கனவு கனவாகவே இருக்கிறது. இதற்கிடையில் தனது அம்மா மற்றும் போலீஸ் அதிகாரியாக இருக்கும் தனது மாமாவின் (ராமதாஸ்) தொடர் வற்புறுத்தலால் போலீஸ் வேலையில் சேர்கிறார்.
விஷ்ணு பணியில் சேர்ந்த சில நாட்களில் பள்ளி மாணவி ஒருவர் கடத்திக் கொலை செய்யப்படுகிறார். இதற்கான தடயங்களை சேகரிக்கும் விஷ்ணு மறுபுறம் ஆசிரியையாக இருக்கும் அமலா பாலுடன் காதல் வயப்படுகிறார். இதுகுறித்த விசாரணையில் இறங்கும் விஷ்ணுவுக்கு அடுத்தடுத்து சிறுமிகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஒருகட்டத்தில் அவரது அக்கா மகள் கடத்தப்படுகிறார்.
இதற்கிடையில் இந்த வழக்கில் ஏற்படும் ஒரு முக்கிய பிரச்சினையின் காரணமாக விஷ்ணு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பள்ளி சிறுமிகளை கடத்திக் கொலை செய்யும் அந்த ராட்சசனை விஷ்ணு கண்டுபிடித்தாரா? அவரது அக்கா மகள் காப்பாற்றப்பட்டாரா? கொலையாளி எதற்காக இப்படி செய்கிறார்? அவரை விஷ்ணுவால் நெருங்க முடிந்ததா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடையே 'ராட்சசன்'.
விஷ்ணு விஷால் படத்திற்காக கடும் உழைப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக ராட்சசனை கண்டுபிடிக்க விஷ்ணு மெனக்கெடும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது. படத்தை தனது தோள்களில் தூக்கி சுமந்திருக்கிறார் என விஷ்ணுவை தாராளமாக சொல்லலாம். அமலா பாலுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் தான் வரும் காட்சிகளில் ரசிகர்களைக் கவர்கிறார்.
இதேபோல ராதாரவி, ராமதாஸ், காளி வெங்கட், சூசன் ஜார்ஜ், நிழல்கள் ரவி ஆகியோரும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கிடைத்த காட்சிகளில் தனித்தனியாக ஸ்கோர் செய்கின்றனர். முழு திரில்லர் படமொன்றைக் கையில் எடுத்து ரசிகர்களைக் கவரும் வகையில், திரைக்கதையை அமைத்த இயக்குநர் ராம் குமாருக்கு வாழ்த்துக்கள்.
படத்தில் சைக்கோ கொலைகாரனை நேரடியாகக் காட்டாமலே ரசிகர்களை அச்சுறுத்த முடியும் என இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது பின்னணி இசை மூலம் நிரூபித்திருக்கிறார். பி.வி.சங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. இதேபோல எடிட்டர் ஷான் லோகேஷும் படத்துக்கு தனது பங்களிப்பினை சிறப்பாக அளித்திருக்கிறார்.