ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார், இளவரசு, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மகாமுனி. மௌனகுரு படத்துக்கு பிறகு 8 வருடங்கள் கழித்து சாந்தகுமார் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.
மகாதேவன், முனிராஜன் என உருவ ஒற்றுமை உள்ள இருவர். அரசியல்வாதி ஒருவருக்கு கையாளாக, அவர் செய்யும் அரசியல் கொலைகளுக்கு திட்டம் போட்டு தரும் பணி செய்கிறார் மகாராஜன். அதன் விளைவாக ஒரு கொலையில் பலியாடாக்கப்படுகிறார்.
மற்றொருவர் சாந்தசொரூபியான முனிராஜன். விவேகானந்தர், வள்ளலார் போல் கல்யாணம் செய்து கொள்ளாமல் பிறருக்கு தொண்டு செய்து வாழ ஆசைப்படுகிறார். அவரது வாழ்வில் பெண் ரூபத்தில் ஜாதி குறுக்கே வருகிறது. இருவரது வாழ்க்கையிலும் பின்னே நடக்கும் நிகழ்வுகளே படத்தின் கதை.
மகா, முனி என்ற இருவேடங்களில் ஆர்யா. மகாவாக கோபம், ஏழ்மையினால் வரும் இயலாமை என நடுத்தரவயது இளைஞரை கண்முன் கொண்டுவந்திருக்கிறார். முனியாக அமைதியான, தெளிவான சிந்தனை என ஒரு சாந்த சொரூபியாக தோன்றுகிறார். குறிப்பாக ஒற்றை காலில் அமர்ந்து யோகா செய்யும் காட்சி அவரது கடின உழைப்பிற்கு சாட்சி.
மகாவின் மனைவியாக இந்துஜா ஒரு ஏழை மனைவியாக ஆசைகள், தேவைகள் எதுவும் கிடைக்காமல் கணவனை குறை சொல்வது, பின்னர் சமாதானமாகி கொஞ்சுவது என்று தனது வேலையை சரியாக செய்திருக்கிறார். அரசியல், வாழ்க்கை உள்ளிட்ட எல்லாவற்றிலும் தெளிவான சிந்தனை உள்ள இளைஞியாக மஹிமா நம்பியார். வறட்டு கெளரவம் கொண்ட கிராமத்து பெரிய மனிதரான தனது தந்தையை எதிர்த்து நிற்கும் இடங்களில் மாஸ்.
முனியின் அம்மாவாக ரோஹினி, அரசியல்வாதியாக இளவரசு, கிராமத்து பெரியமனிதராக ஜெயப்பிரகாஷ் என ஒவ்வொரும் தங்களது வேடத்தின் கனம் உணர்ந்து ஒரு தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
அருண் பத்மநாபனின் கேமரா ஒரு கதை சொல்லியாக, முக்கிய திருப்பங்களை நேர்த்தியுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது. எஸ்.எஸ்.தமனின் பின்னணி இசை காட்சிகளின் வீரியத்தை பார்வையாளர்களுக்கு கடத்துகிறது.
இரண்டு வெவ்வேறு மனிதர்கள் , அவர்களுக்கு நிகழும் பிரச்சனைகள் , அதனை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் என்ற கதையை சுவாரஸியமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். "ஒருத்தன் பொறந்ததுல இருந்து சாகுற வரைக்கும் என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தான் என்பதை பொறுத்துதான் அவன் சந்ததி அவனோட நல்லது கெட்டதுகளை தூக்கி சுமக்கும்" என்ற வசனம் தான் படம் நமக்கு சொல்லும் கருத்து.
தற்போதைய அரசியல் எப்படி இயங்குகிறது என்பதை கதாப்பாத்திரங்களின் வழியாக தோலுரிக்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் ஒரு வன்முறை காட்சியை நேரடியாக காட்டாமல் அதன் வீரியத்தை மிகச்சரியாக பார்வையாளர்களுக்கு கடத்தப்பட்டிருப்பது சிறப்பு. மேலும் மகா கதாப்பாத்திரத்தை விளக்குவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தை குறைத்திருக்கலாம்.