கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷ் பேரடி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'கழுகு 2'. கொடைக்கானல் மலைப்பகுதியில் செந்நாய்களின் தொல்லையால் மரம் வெட்ட வராமல் மக்கள் பீதியடைகின்றனர்.
செந்நாய்களை கட்டுப்படுத்த வேட்டையர்களை தேடி தேனி செல்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். திருட்டு வழக்கில் கைது செய்யப்படும் கிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் போலீஸ் துப்பாக்கிகளை திருடி தப்பிக்கின்றனர். அவர்களை துப்பாக்கியுடன் பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர் வேட்டையர்கள் என எண்ணி கொடைக்கானல் அழைத்து செல்கிறார்.
அங்கே எம்.எஸ்.பாஸ்கரின் மகள் பிந்து மாதவியும் கிருஷ்ணாவும் ஒருவருக்கு ஒருவர் காதலிக்கின்றனர். உள்ளூர் எம்.எல்.ஏவான ஹரீஷ் பேரடி, அந்த காட்டில் முதுமக்கள் தாளி இருப்பதாகவும் அதில் பழங்காலத்து நகைகள் இருப்பதும் தெரியவந்து கொள்ளையடிக்க முயல்கிறார்.
இதன் இடையே கிருஷ்ணா பிந்துமாதவியை கரம்பிடிக்கிறாரா ? இல்லையா? ஹரீஷ் பேரடிக்கு முதுமக்கள் தாளி கிடைத்ததா ? இல்லையா? என்பதே படத்தின் கதை. ஹீரோ கிருஷ்ணா முடிந்த வரை காட்சிகளுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ஒரு சில காட்சிகளில் காளி வெங்கட் சிரிப்பை வரவழைக்கிறார். படத்தின் முக்கியமான இறுதிக்காட்சிகளில் எம்.எஸ்.பாஸ்கர் தனது முதிர்ச்சியான நடிப்பை வழங்கி படத்திற்கு பெரிதும் துணை நிற்கிறார். பிந்து மாதவிக்கு நடிப்பதற்கு நிறைய காட்சிகள் இருந்தும் உணர்ச்சிகளை இன்னும் சற்று நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கலாம்.
தொடக்கத்தில் கொடைக்கானல் காடுகளை அழகாகவும், அதே காடுகளை முக்கிய காட்சிகளில் திகிலூட்டும் வகையிலும் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டச்சார்ஜி. படத்துக்கு மற்றொரு ஹீரோ என்று சொல்லுமளவுக்கு தனது பின்னணி இசையால் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார் யுவன்.
படத்தில் முதுமக்கள் தாளி பற்றிக் சொல்லப்பட்டிருக்கும் விதம் மிகவும் நன்றாக இருந்தது. செந்நாய், முதுமக்கள் தாழி போன்ற விஷயங்கள் சொல்லியிருந்தும் அது கதைக்கு பெரிதும் பயன்படாதது ஏமாற்றமளித்தது. கிளைமேக்ஸ் காட்சிகள் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. படத்தில் கதைக்குள் செல்வதற்கே நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. திருட்டு போன்ற காட்சிகளில் உள்ள லாஜிக் மீறல்களால் படத்தினுள் ஒன்ற முடியவில்லை.