வெங்கட் பிரபுவின் Black Ticket Company மற்றும் ஆர். ரவீந்திரனின் Trident Arts Productions தயாரிப்பில் இயக்குநர் சிம்புதேவன் எழுதி இயக்கி நேரடியாக SonyLIV ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'கசடதபற'. சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், ஷாந்தனு, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ரெஜினா, ப்ரியா பவானி ஷங்கர், விஜயலக்ஷ்மி, சிஜா ரோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெங்கட் பிரபு இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
Vantage Point Theory மற்றும் Butterfly Effect எனும் இரண்டு கோட்பாடுகளை மையமாக கொண்டு, தென் சென்னையின் வெவ்வேறு மனிதர்களின் கதையை, அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களை தொகுத்து உருவாக்கியுள்ள திரைப்படம்தான் இந்த ‘கசடதபற’.
வெங்கட் பிரபுவும் விஜயலக்ஷ்மியும் மனதை உருக்கும் அளவுக்கு தனித்து ஸ்கோர் செய்கிறார்கள். ஷாந்தனு, சந்தீப் கிஷன், ரெஜினா கேஸண்ட்ரா, ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் கதையின் நகர்வுக்கு பலம் சேர்க்கிறார்கள். ஹரீஷ் கல்யான் கேரக்டர் ஸ்கெட்ச்சும், அதை அவர் டெலிவர் செய்துள்ள விதமும் சிறப்பு. பிரேம்ஜி எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.!
யுவன் ஷங்கர் ராஜா, ஷான் ரோல்டன், சாம் சிஎஸ், பிரேம்ஜி, ஜிப்ரான், சந்தோஷ் நாராயணன் என தமிழ் சினிமாவின் ஆறு இசையமைப்பாளர்கள் திரைக்கதையோடு துணை நிற்கிறார்கள். கலர் டோன், Aspect Ratio என காட்சிக்கு காட்சி ஒளிப்பதிவாளர்களின் உழைப்பு தெரிகிறது. ஆறு பகுதிகளையும் ஒரே படமாக்கிய படத்தொகுப்பாளர்களின் பங்களிப்பு பாராட்டுதலுக்கு உரியது. இப்படி இத்திரைப்படத்தை தொழில்நுட்ப ரீதியாகவும் உயர்த்தி பிடிக்கும் டெக்னிக்கல் மூளைகளுக்கு சல்யூட்.
ஆந்தாலஜி படம் இல்லை இது. ஆனால் 6 கதைகளில் ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு விதம். வெவ்வேறு வாழ்க்கை. ஒரு கதை அழகாக இன்னொரு கதையுடன் சென்று கைகோர்க்க, முந்தைய கதையின் ட்விஸ்ட் அடுத்த கதையில் உடைவதும், அடுத்த கதைக்கான முடிச்சு முந்தைய கதையில் விழுவதும் செம்ம. க்ளைமாக்ஸ் வரை கனமான உணர்வுகளை கொண்டு கதை சொல்லி முடித்ததில் க்ளாப்ஸ் வாங்குகிறார் இயக்குநர்.
சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண் கதைகளுக்கு இன்னும் ஒரு முடிவைக் கொடுத்து நிறைவு செய்திருக்கலாம்.
அரசியல் நையாண்டி, மேஜிக்கல் சர்ரியலிசம், ஃபேண்டஸி என படத்திற்கு படம் வெரைட்டி காட்டும் சிம்புதேவன், தமிழில் ஒரு தரமான ஹைப்பர் லிங் படத்தை கொடுப்பதிலும் சிக்சர் அடித்துள்ளார். எப்போதும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர், இம்முறை நெகிழ வைத்திருக்கிறார்.