எமனான ராதாரவி தனக்கு வயதானதால் பதவி விலக முடிவெடுக்கிறார். தனது மனைவியின் ஆலோசனைப்படி தனது மகன் யோகி பாபுவை அடுத்த எமனாக அறிவிக்கிறார்.
இந்நிலையில் நாம் தான் அடுத்த எமன் என்று எண்ணிக்கொண்டிருந்த சித்திர குப்தனான ரமேஷ் திலக் ஆசையில் மண் விழுகிறது.
இதனையடுத்து யோகி பாபுவை பதவி விலகச் செய்ய ரமேஷ் திலக் ரகசியமாக சதித் திட்டம் தீட்டுகிறார். அவரது சதித்திட்டம் பழித்ததா? யோகி பாபு தனது எமன் பதவியை எப்படி தக்க வைத்துக் கொள்கிறார் ? என்பதே படத்தின் கதை.
எமனாக யோகி பாபு. நாம் இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட எமன் வேடத்துக்கு சரியாக பொருந்துகிறார். காமெடி தான் படத்தின் அடிநாதம் என்பதால் அவரது தெனாவட்டான பேச்சும் இன்னசென்ட்டான உடல் மொழியும் படத்திற்கு பெரிதும் உதவியிருக்கின்றன.
அவரையடுத்து முக்கியமான வேடம் ரமேஷ் திலக்கிற்கு. காமெடியுடன் கூடிய வில்லத்தனத்தை முதல் பாதியிலும், பொறுப்பான சித்திர குப்தனாக குணச்சித்திர வேடத்தில் இரண்டாம் பாதியில் வந்து நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ராதாரவி, ரேகா, மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேடங்களை சரியாக செய்திருக்கிறார்கள். படத்தில் தற்போதைய அரசியல் நிகழ்வுகளை கிண்டல் செய்து அதனை முடிந்த வரை சரியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
மேலும் மறைந்த அரசியல் தலைவர்களை அவர்களைப்போலவே தோற்றம் கொண்டவர்களை இடம் பெறச் செய்து அவர்களை சரியாக கதைக்கு தக்கவாறு பயன்படுத்திக் கொண்டது சுவாரசியம் தந்தது.
படத்தின் வசனங்கள் படத்துக்கு பெரும் பலமாக அமைந்திருந்தது. இயக்குநர் முத்துக்குமரனுடன் இணைந்து யோகி பாபு வசனம் எழுதியிருக்கிறார். காமெடி படம் என்றாலும் ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிக்க முடிகிறது.
ஆனால் யோகி பாபுவின் சில ஒன் லைன் பஞ்ச்களுக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு. ஃபேண்டசி வகைப்படம் தான் என்றாலும் காமெடிக்காக வைக்கப்பட்ட சில ட்விஸ்ட்டுகள் சற்று நம்பகத்தன்மையை குறைக்கிறது.
இருப்பினும் யோகி பாபுவின் காமெடி வசனங்கள், மறைந்த தலைவர்களை நினைவு படுத்தும் காட்சிகள் என படத்தை ஆங்காங்கே சுவாரசியப்படுத்துகின்றன.