எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரித்து வெளியாகியுள்ள திரைப்படம் சக்ரா.
சென்னை சிட்டியில் 49 இடங்களில் திருடு போகிறது. 50வதாக மிலிட்டரியைச் சேர்ந்த விஷால் (சுபாஷ் சந்திரபோஸ்) தான் பெரிதும் மதிக்கும் தனது (மறைந்த) ராணுவ தந்தையின் (நாசர்) அசோக சக்ரா மெடல் திருடு போவதால் போலீசுடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்துகிறார். சைபர் நிழலுலகின் பிடரியை விஷால் பிடிக்கப்போகும் போதுதான் அந்த 'மாஸட்ர் மைண்ட்' கதாபாத்திரம்(ரெஜினா கேசண்ட்ரா) இடைவெளியில் ரிவீலாகிறது. விஷால் அவரை எப்படி கண்டுபிடித்து தந்தையின் சக்ரா மெடலை மீட்கிறார் என்பதே மீதிக்கதை.
"சுவிஸ் பேங்க்கில் இந்தியர்களின் கறுப்பு பணம்", "டெல்டா விவசாயிகள் தற்கொலை", "ஒரு நாளைக்கு 1.5ஜிபி இலவச டேட்டா", "டிஜிட்டல் இந்தியா", "அஜய் மல்லையா", "எத்திக்ஸ் இல்லாத இந்த ஊருக்கு எத்திக்கல் ஹேக்கிங் தேவையில்லை. ஹேக்கிங்கே போதும்", "சட்டம் பசிக்கு திருடுறவங்களுக்கு தான்.. பத்தாயிரம் கோடி திருடுறவங்களுக்கு இல்ல", "மக்கள் ஆன்லைனை நம்பி வாழ ஆரம்பிச்சுட்டாங்க. கார்ப்பரேட் தனிபர் டேட்டாக்களை வைத்து அவங்கள ஆள ஆரம்பிச்சுட்டாங்க" என அங்கங்கே அரசியல் வசனங்களை தூவி இருக்கிறார்கள்.
படத்துக்கு படம் கதையில் வெரைட்டி காட்டும் விஷால் நடிப்பிலும் சற்றே வித்தியாசம் காட்டலாமே என்கிற தாபம் இதில் தீர்ந்தது. வழக்கம் போல் மூச்சிறைக்க கருத்து சொல்லாமல், இப்படத்தில் நறுக்கென்று முடிக்கிறார். உறுதியான உடலுடன் வெள்ளித்திரையில் தோன்றும்போது வெள்ளித்திரையா அல்லது இரும்புத்திரையா? என தோன்றுகிறது. அந்த அளவுக்கு ஃபிட். எனினும் எப்பவாச்சும் மிலிட்டரின்னா ஓகே.. எப்பவுமே மிலிட்டரினா எப்படி சார்?
ஷ்ரத்தா ஶ்ரீநாத் எண்டரியே செம்ம. ரெஜினா கெசண்ட்ராவும் பிற்பாதியில் மிரட்டல் நடிப்பில் அசர வைக்கிறார். ஒரு தென்னிந்திய கமர்ஷியல் ஹீரோவின் படத்தில் இத்தனை துணிச்சலான, 'நாயகிக்கான இலக்கணத்தை மீறும்' கதாபாத்திரங்கள் அபூர்வம் தான்.
குறைவாக தோன்றினாலும் சிருஷ்டி டாங்கேவுக்கு நிறைவான பாத்திரம் இல்லை. ஸ்கோப் குறைவு எனினும் அளவான காமெடியில் லைக்ஸ் அள்ளுகிறார் ரோபோ ஷங்கர். கே.ஆர்.விஜயா, விஜய் பாபு, நீலிமா ராணி, மனோபாலா அனைவரும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்கின்றனர்.
என்னதான் மிலிட்டரி ஆக இருந்தாலும் சட்டம்-ஒழுங்கு துறையின் கீழ் வரும் ஒரு ராபரி வழக்கை காவல்துறையின் உதவியுடன் தேடி பிடிப்பதற்கு அவருக்கு இத்தனை சுதந்திரம் தரப்படுமா? வெறும் 2 'பேக்கு' ஆண்களைக் கொண்டு ஒரே நேரத்தில் இத்தனை ராபரி செய்து சிட்டி போலீஸ்க்கு தண்ணி காட்ட முடியுமா? திருட்டு பைக் பற்றி இடைவேளைக்கு பிறகு தான் யோசிக்கிறார்கள். சிறுவயதில் ரெஜினா செய்யும் இரண்டு கொலைகள் பற்றிய கேஸ் என்ன ஆச்சு?.. என நீளுகிறது கேள்விப்பட்டியல்.
பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் சைபர் உலகத்தை துல்லியமாக காணமுடிகிறது. அதன் தீவிர சற்றும் குறையாமல் நுணுக்கமாக கத்தரி போட்டு கச்சிதமாக காட்சிகளை 2 மணிநேரம் பத்து நிமிடத்துக்கு தொகுத்திருக்கிறார் எடிட்டர் தியாகு. யுவனின் இசையில் ‘அம்மா பாடல்’ உட்பட உணர்வுகளை கடத்தும் பாடல்களும், கதையின் போக்கில் அதிர்வுகளைக் கடத்தும் பின்னணி இசையும் படத்தின் பலம்.
நாயகி ஷ்ரத்தா மற்றும் ரெஜினா இருவரின் ஸ்கிரீன் ட்ரீட்மெண்டிற்காகவே ஃபைட் மாஸ்டரை பாராட்டியாக வேண்டும். சண்டைக் காட்சிகளை அனல் அரசு, அன்பறிவ் (ஒரு பகுதி) மிரட்டியிருக்கிறார்கள். இரண்டு பிளம்பர்களை கண்டுபிடிக்கும் அந்த படலம் க்ளாப்ஸ் வாங்குகிறது.