-ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஜய், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக் , யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் பிகில். அட்லி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
பெண்கள் ஃபுட்பால் அணியின் பயிற்சியாளராக கட்டாயத்தின் பேரில் வரும் மைக்கேல் அந்த அணியை எப்படி வெற்றி கொள்ளச் செய்கிறார் என்பதே பிகில் படத்தின் கதை. படத்தின் ஆகப் பெரும் பலம் விஜய். காதல், ஆக்சன், காமெடி, ரொமான்ஸ், சென்டிமென்ட் கூடவே ஃபுட்பால் என எல்லா ஏரியாக்களிலும் பட்டயக்கிளப்புகிறார். இரண்டு வேடங்களையும் வெவ்வேறு மேனரிசங்களால் வித்தியாசப்படுத்தி அசத்தியுள்ளார்.
ஏஞ்சலாக நயன்தாரா, பெயருக்கேற்றார் போல் தான் தோன்றும் காட்சிகளில் கியூட்டான ரியாக்ஷன்களால் மட்டுமல்லாமல், விஜய்க்கு சரிசமமாக லந்து செய்து வசீகரிக்கிறார். கதிர் தனது இயல்பான நடிப்பால் படத்தின் முக்கிய திருப்பங்களுக்கு பெரிதும் உதவியிருக்கிறார். ஜாக்கி ஷெராஃப் ஸ்டைலிஷ் வில்லனாக ரியாக்ஷன்களால் மிரட்ட, ஆக்சன் காட்சிகளில் இறங்கி அடித்திருக்கிறார் டேனியல் பாலாஜி. விவேக் மற்றும் யோகி பாபு தங்கள் டைமிங் காமெடிகளால் சிரிக்க வைக்கிறார்கள். சாதிக்கத் துடிக்கும் சிங்கப் பெண்களாக இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, ரெபா மோனிகா ஜான், அமிர்தா உள்ளிட்டோர் ஃபுட் பால் காட்சிகளில் வசீகரிக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பெரும் பலம். குறிப்பாக சிங்கப்பெண்ணே பாடலை படத்தோடு பார்க்கும் போது செம. ஃபுட்பால் சம்மந்தமான காட்சிகளில் துல்லியமான ஒளிப்பதிவை வழங்கி மனதில் நிற்கிறார் ஜி.கே.விஷ்ணு.
படத்தில் ஆக்சன் காட்சிகள், ஃபுட் பால் சம்மந்தபட்ட காட்சிகள் படமாக்கப்பட்டவிதம் சுவாரஸியத்தை அளித்தது. பெண்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய காட்சிகளும் வசனங்களும் அவர்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது.
தமிழ்நாடு ஃபுட்பால் அணிக்காக விளையாடும் பெண்களில் ஒருவருக்குக் கூட, பிரபல ஃபுட் பால் பிளேயராக இருந்த பிகில் பற்றி தெரியாமல் இருப்பது படத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைக்கிறது. படத்தின் முதல் பாதியில் கதைக்குள் செல்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஃபுட்பால் சம்பத்தப்பட்ட காட்சிகளை இன்னும் டீட்டெயிலாக படமாக்கியிருக்கலாம். இருப்பினும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக வசீகரிக்கிறான் இந்த பிகில்