சூப்பர்ஸ்டார் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான எந்திரன் திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து 8 ஆண்டுகளுக்குப்பின் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் இன்று வெளியாகியிருக்கும் 2.O ரசிகர்களைக் கவர்ந்ததா? என்பதை இங்கே பார்க்கலாம்.
வசீகரன்(ரஜினி) தனக்கு உதவியாக நிலா(எமி ஜாக்சன்) என்னும் பெண் ரோபோவை தனக்கு உதவியாக வைத்துக்கொண்டு தனது ஆராய்ச்சியினை தொடர்ந்து வருகிறார். திடீரென மக்களின் செல்போன்கள் மாயமாக மறைகின்றன. இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. மக்களின் அச்சத்தைப் போக்க அரசால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பயனற்றுப் போகின்றன.
இதைத்தொடர்ந்து அரசின் அனுமதியுடன் சிட்டிக்கு உயிர் கொடுத்து செல்போன்கள் மயமாவதன் காரணத்தை வசீகரன் கண்டறிந்து, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். ஆனால் சூழ்ச்சி காரணமாக அந்த தீய சக்தி மீண்டும் உயிர் பெறுகிறது. வசீகரன் மீண்டும் அந்த தீய சக்தியை எதிர்த்து மக்களைக் காத்தாரா? சிட்டி என்ன ஆனது? ஏன் அந்த தீயசக்தி மக்களின் செல்போன்களை பறிக்கிறது? போன்ற கேள்விகளுக்கு தனது பிரமாண்ட இயக்கத்தால் ஷங்கர் சொல்லும் பதிலே 2.O.
வசீகரன்,சிட்டி என இரண்டிலுமே ரஜினி ஸ்கோர் செய்கிறார். எனினும் ரசிகர்களை அதிகமாகக் கவர்வது வெர்ஷன் 2.O வாக வரும் சிட்டி தான். படத்தில் காமெடி நடிகர்கள் இல்லாத குறையை ரஜினியே தனது ஒன்லைன் பஞ்ச்களால் தீர்த்து வைக்கிறார். காதல்,காமெடி,ஆக்ஷன் என எல்லா ஏரியாவிலும் வழக்கம் போல தலைவர் சொல்லி அடித்திருக்கிறார்.
ரஜினிக்கு நிகரான வில்லனாக அக்ஷய் குமார் நடிப்பு அட்டகாசம். செண்டிமெண்ட், ஆக்ஷன் கலந்து கட்டி தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை அக்ஷய் சிறப்பாக செய்திருக்கிறார். இதேபோல நிலாவாக வரும் எமி ஜாக்சனின் நடிப்பும் கச்சிதம் வசீகரனுக்கு உதவுவது, சிட்டியைப் பார்த்து உருகுவது என படம் முழுவதிலும் அவரின் பங்களிப்பு கச்சிதம். இதேபோல சுதான்ஷு பாண்டே, அதில் ஹுசைன் ஆகியோரும் கதைக்கு ஏற்ற நடிப்பினை வழங்கியுள்ளனர்.
பிரமாண்ட இயக்குநர் என்பதை மீண்டும் ஒருமுறை இப்படத்தின் மூலம் ஷங்கர் நிரூபித்திருக்கிறார். சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனை தனது பாணியில் ஷங்கர் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ராஜாளி, புள்ளினங்கள் பாடல்கள் கவர்கின்றன. இதேபோல பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், அந்தோணியின் எடிட்டிங்கும் படத்துக்கு கச்சிதம்.
மிகப்பெரும் பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் தயாரித்த 2.O திரைப்படம் நிச்சயம் இந்திய சினிமாவுக்கு ஒரு பெருமைதான் என தாராளமாக சொல்லலாம்.