அறம்,
திரையரங்குகள் மீதும் திரைப்படங்கள் மீதும் மீண்டும் தீரா காதலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆர்ட், கமர்சியல் என்று சினிமாக்கான வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும் கட்டத்தில் அத்தனை தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தியிருக்கும் ஒரு நேர்மையான சினிமா.ஒரு திரைப்படம் பார்க்கும் 120 நிமிடமும் உங்களை இருப்புக்கொள்ள விடமால் பரிதவிப்பும், பரபரப்பையும் தரும் எனில் அது நிச்சயம் கொண்டாட தக்க தரமான திரைப்படம்!
Documentary நெடி அடிக்கும் ஒரு கதைக்களம், சற்று தப்பினால் பரப்புரை போல் மாறிவிட வாய்ப்புள்ள வசனங்கள், heroine centric கதை என்று எல்லாமே ரிஸ்க் உள்ள திரைப்படத்தை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது கோபியின் திரைமொழி!
படத்தின் கதைக்களம் ஆரம்பிக்கும் முன்னே வரும் காட்சிகளே நம்மை ஒரு வித மெல்லிய பதட்டத்திற்குள் இட்டு செல்கிறது. வரும் slow motion காட்சிகள், பின்னணி இசை, முகத்தில் அறையும் உண்மைகளை காட்சிகளாய் அமைத்திருப்பது என்று படம் ஆரம்பம் முதலே நம் மனதை பிசைய தொடங்குகிறது.
அரசியல் பேசுகிற படங்கள் நம் காலத்தின் கட்டாயம்! வெகு சில படங்கள் மட்டுமே திரைமொழி ஒட்டி சிறந்த அரசியல் படங்களாக உருவாகின்றன. அவ்வகையில் அறம் எனக்கு மிகவும் ஆச்சர்யமே. ஏனெனில் இருக்கும் இரண்டு மணி நேரத்தில் மொத்த அரசியலையும் கேள்வி கேட்கும் வகையிலேயே, உண்மைக்கு மிக அருகில் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சி படுத்தியுள்ளார், அதுவும் செம எமோஷனலாக படத்துடன் நம்மை ஒன்றிணைய வைக்கும் சுவாரஸ்யமான திரைமொழி.
பெட்ரோல் கிடைக்கிற ஊரில் தண்ணீர் கிடைக்காத நிலை, ஸ்மார்ட் போன் இருக்கும் வீடுகளில் பையனின் மருத்துவ செலவிற்கு செலவு செய்ய வரும் தயக்கம், ராக்கெட் செலுத்தும் ஊரிற்கு மிக அருகில் இருக்கும் ஓர் ஊரில் தலைமுறை தலைமுறையாக அப்பா மகன் என்று பொருளாதாரத்தால் கலையும் கனவுகள், இருந்தும் விண்ணில் பாயும் ராக்கெட்டிற்காக பிராத்திக்கும் கிராம மக்கள், பேனருக்காக மாற்றி எடுக்கப்படும் புகைப்பட காட்சி, மக்களிடம் இருந்து அரசு எப்படி திட்டமிட்டு உண்மை நிலையை மறைக்கிறது என்பதை சில நொடிகளில் சொல்லிவிட்டு செல்கிறார் இயக்குனர்,மக்களின் மீது போலீசால் முதலில் எறியப்படும் கற்கள், நயன்தாரா சந்திக்கும் அத்தனை அரசியல் அழுத்தங்கள், கோடிகள் கொட்டி கொட்டி ராக்கெட் ஏவப்படும் நாட்டில், 30000 ரூபாய் செலவு செய்து ஒரு ரோபோட்டை செய்யாத அலட்சிய அரசாங்கம் என்று படம் நெடுக கோபி நடப்பு அரசியலை வைத்து செய்துள்ளார். "இவனுங்க கிட்ட வெறும் கயிறு மட்டும் தான் இருக்கு" -னு போகிற போக்கில் வரும் வசனம் டிஜிட்டல் இந்தியின் மீது அடிக்கப்பட்ட தரமான அடி.
அரசியலையும் தாண்டி கோபி கையாண்டிருக்கும் எமோஷனலுக்கு பேரன்புகள், அப்பா மகன், அம்மா மகன், அப்பா மகள், அம்மா மகள், கணவன் மனைவி என்று உறவுகளின் எமோஷன், ஊர் மக்களின் பேரன்பு பரிதவிப்பு, குழியில் இருப்பினும் பயம் கொள்ளாத தன்ஷிகா, குழிக்குள் தன்ஷிகாவின் அண்ணனை முதலில் அனுப்பும் போது அவனிடம் உள்ள பயம் நம்மை தொற்றி கொள்ளும், மீண்டும் அவன் குழிக்குள் செல்லும் போது அக்காட்சியை காட்டமல் அவன் நீச்சல் அடிக்கும் காட்சியை காமித்ததெல்லாம் வேற லெவல் கோபி!! அதிகாரிகளே ஆயினும் அவர்களின் பரிதவிப்பு, ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை எவ்வளவு பெரிய தடைகள் இருப்பினும் கலங்காத நயன்தாரா குழந்தை தப்பியவுடன் கலங்கி அழும் காட்சி........ இதை எழுதிக்கொண்டிருக்கும் போதே சிலிர்க்கிறது...!
அவ்வளவு அற்புத தருணங்களையும், மனதை என்னவோ செய்யும் உண்மைகளையும் இவ்வளவு குறுகிய நேரத்திற்குள் தந்துள்ளார் கோபி.
49 வயதில் கோபி அறம் தந்துள்ளார், எவ்வளவு போராட்டங்கள் இருந்திருக்கும் இம்மனிதனின் வாழ்வில்!! 50 வயதில் சாதிப்பது என்பது சாதாரணம் அல்ல. அதுவும் அவரின் படைப்பில் மக்களின் மீது அவருக்கு இருக்கும் பேரன்பை காமிக்கிறது. இவ்வளவு அவமானங்களை தாண்டி நமக்கான ஒரு சினிமாவை தந்துள்ளார் கோபி. எனக்கு செமையான ஒரு சினிமா experience தந்தரிக்காகவே பேரன்புகள் கோபி.
இவரை பற்றி எழுதாமல் இக்கட்டுரை முற்று பெறாது. ஆம் நயன்தாரா! அவ்வளவு கம்பீரமான attitute தேவை இப்படியான ஒரு படத்தை தேர்வு செய்து அது வெளி வர இவ்வளவு மெனக்கெடல் எடுக்க. ஒரு heroine காக மார்க்கெட் உருவாவதெல்லாம் அபூர்வம், அந்த மார்க்கெட்டை மாயா, அறம் போன்று சரியான படங்களுக்கு உபயோகிப்பதால் தான் நயன்தாரா கெத்து. மொக்கை கமர்சியல் படத்தில் நடித்து இதுதான் மக்கள் விரும்புகிறார்கள் என்று சப்பை கட்டு கட்டிக்கொண்டிருக்கும் அனைத்து ஹீரோக்களுக்கும் நயன்தாராவின் அறம் சமர்ப்பணம்.