தமிழ் சினிமாவின் தன்னிகரில்லாத 'தனிப்பெரும்' கலைஞன், வைகைப்புயல் வடிவேலு இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். வடிவேலு பிறந்தநாளை அவரைவிடவும் அவரது ரசிகர்கள் கோலாகலமாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதனால் #HBDVadivelu, #HBDVadiveluSir போன்ற ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன.
30 வருடங்களாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்துவரும் வடிவேலு எந்த வேடத்திலும் கச்சிதமாகப் பொருந்தக் கூடியவர். ஒருநாளின் தினசரியை ஆஹான், என்ன இது சின்னபுள்ளத்தனமா இருக்கு, நெக்ஸ்ட் ரெஸ்ட், ஒய் பிளட் சேம் பிளட் போன்ற வடிவேலுவின் வசனங்கள் இல்லாமல் நாம் அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது.
கைப்புள்ள, சூனா பானா, தீப்பொறி திருமுகம், படித்துறை பாண்டி, வண்டுமுருகன், ஸ்நேக் பாபு, வீரபாகு, நாய் சேகர் வடிவேலு நடித்த படங்களில் அவரின் புகழ்பெற்ற பெயர்கள் இவை. சட்டென்று வடிவேலு என்பதைவிட கைப்புள்ள என்றுதான் அவரை நினைவு கூர்கிறோம். அந்த படம் வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றளவும் வின்னர் படத்தின் வசனங்கள் எவர்கிரீன் ஆக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
ஸ்கூல் ஸ்டூடெண்ட், காலேஜ் ஸ்டூடெண்ட்,ரவுடி,போஸ்ட்மேன்,போலீஸ், திருடன்,டாக்டர்,ஆட்டோ டிரைவர், பச்சைக்கிளி,ராஜா,சாமியார், லேடி கெட்டப்,காண்ட்ராக்டர்,குங்பூ மாஸ்டர்,லாயர், கண்டக்டர் என எந்த வேடமாக இருந்தாலும் பத்து பொருத்தமும் பக்காவாக பச்சக்கென்று பொருந்திப்போவது 'கைப்புள்ள'க்கு மட்டும் தான்.நாம நினைக்குற எந்த உணர்வையும் வார்த்தையே இல்லாம இவர் டயலாக், போட்டோ வச்சே வெளிப்படுத்தலாம் என்பதே இவரின் ஆகப்பெரும் தனிச்சிறப்பு.
மீம்ஸ் உருவாக்குனது வேணா நாங்களா இருக்கலாம். ஆனா எங்களை உருவாக்குவது எங்க தலைவர் தான் என தங்களின் குல தெய்வத்தின் பிறந்தநாளை விதவிதமான மீம்ஸ்களால் மீம்ஸ் கிரியேட்டர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். 'ஒரு மீம்க்கு ஒரு பைசா' என வாங்கி இருந்தாலும், பொருளாதாரத்தில் அம்பானியையே மிஞ்சி இருக்கலாம் அவ்வளவு மீம்களுக்கு 'வைகைப்புயல்' உயிர் கொடுத்து இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
தனது டைமிங்,ரைமிங் மற்றும் பாடி லாங்க்வேஜ்க்காகாவே தனித்த ரசிகர்களைக் கொண்ட வடிவேலு மீண்டும் அதிக படங்களில் நடித்து, உலகம் முழுவதும் உள்ள தனது கோடான கோடி ரசிகர்களை இன்றுபோல என்றும் சிரிக்க வைக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை!
சினிமாவில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நகைச்சுவை ஒழியும்வரை அவர் அரசன் தான் என, வலைதளவாசி ஒருவர் ட்வீட்டி இருக்கிறார் எவ்வளவு நிதர்சனமான உண்மை...
Meme Credit: NK Memes