சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா, சுதீப் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தபங் 3. சல்மான் கான் ஃபிலிம்ஸ், அர்பாஸ் கான் புரொடக்ஷன் சேஃப்ரான் புரோட்காஸ்ட் அண்ட் மீடியா லிமிட்டட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை பிரபு தேவா இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழில் வெளியிட்டுள்ளது.
சுல்புல் பாண்டியனான சல்மான் கான் ஊரில் யாருக்கேனும் பிரச்சனை என்றால் உடனே வந்து ஆபத்பாண்டவனாக வந்து நின்று ரவுடிகளை துவம்சம் செய்கிறார். அப்படி பெண்களை விபாச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை தட்டிக் கேட்க போக, அந்த கேங் லீடரான சுதீப்பை பகைத்துக்கொள்கிறார். அப்பொழுது தான் பாலா சிங்குடன் ( சுதீப் ) அவருக்கு ஏற்கனவே கடும் பகை இருப்பது தெரியவருகிறது. இருவருக்குள்ளும் அப்படி என்ன பிரச்சனை?, சுதீப்பை சுல்புல் பாண்டியன் பழி தீர்த்தாரா இல்லையா ? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது தபங் 3.
தங்கத் தமிழ் பாண்டியன் என்கிற சுல்புல் பாண்டியன் என்ற ரஃப் அண்ட் டஃப்பான போலீஸாக சல்மான் கான். செதுக்கிய மீசை, கண்ணாடி என முந்தைய தபங் சீரிஸ்களை போலவே இதிலும் தனக்கெ உரிய கெத்தான நடை, பாடி லாங்குவேஜ் என மாஸ் காட்டுகிறார்.
அவரது மனைவியாக சோனாக்ஷி சின்ஹா எப்பொழுதும் ஆபத்துகள் சூழ்ந்த போலீஸ் கணவருக்கு எதுவும் நேர்ந்து விடக் கூடாது என்று கலங்குவதும், அதே கணவரை ஒருவர் அடிக்கிறார் என்ற போது பதறி ஆக்ரோஷமாவதும் என அந்த வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
சுதீப், வழக்கமான மாஸ் மசாலா படங்களில் உள்ள வில்லன்கள் போல் அல்லாமல் நடிப்பற்கு எமோஷனலான காட்சிகளிலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸில் அனல் பறக்கும் சண்டைக்காட்சியில் பலம் பொறுந்திய சல்மானுக்கு எதிராக தனது சிக்ஸ் பேக் உடம்புடன் நிற்கும் காட்சிகளில் தான் அந்த வேடத்துக்கு சரியான சாய்ஸ் இவர் மட்டும் தான் என்பதை நிரூபிக்கிறார். குறைவான நேரமே வந்தாலும் தான் இந்த படத்தின் மையப்புள்ளி என்பதை கொண்டு சரியாக நடித்திருக்கிறார் சாயி மஞ்ரேக்கர்.
ஒரு கமர்ஷியல் படத்துக்கு தேவையான அதிரடி இசையை வழங்கியிருக்கிறார்கள் இசையமைப்பாளர்களான சஜித் - வஜித். குறிப்பாக சுல்புல் தபங் தீம் சாங் செம. சண்டைக்காட்சிகளில் துல்லியமாக செயல்பட்டிருக்கிறது மகேஷ் லிமயேவின் ஒளிப்பதிவு.
எம்ஜிஆர் மாதிரியே மீச வச்சிருக்கப்பவே புரிஞ்சிருக்கணும் நான் பொண்ணுங்களுக்கு ஒன்னுனா வந்து நிப்பேணு என்பது போன்ற ஹீயூமர் கலந்த தமிழ் டப்பிங் வசனங்கள் படத்தை ஆங்காங்கே சுவாரஸியப்படுத்துகின்றன. இந்த படம் சுல்புல் பாண்டியன் யார் ? அவர் எப்படி போலீஸ் ஆனார் என்ற பிளாஸ்பேக் காட்சிகள் சொல்லப்பட்டிருப்பதால் ஒரு வகையில் பிரீக்வெல் என்று சொல்லலாம்.
முதல் பாதி முழுவதும் சீரியஸான காட்சிகளையும் ஹியூமர் கலந்து சொன்ன விதம் நன்றாக இருந்தது. ஆனால் அந்த பாணியிலேயே படம் முழுக்க நகர்வதால் ஒரு வித சலிப்பை ஏற்படுத்தியது. வில்லன் சுதீப்பிற்கு ஃபிளாஸ்பேக் காட்சிகளில் இருந்த முக்கியத்துவம் நிகழ்காலத்தில் நடக்கும் காட்சிகளிலும் கொடுத்திருக்கலாம். அதனால் இந்த படம் வெறும் பழிவாங்கும் கதையாக மட்டுமே இருக்கிறது.